நெல்லை மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராஜகோபால சுவாமி
நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலாகும். இங்கு மூலவா் வேதவல்லி, குமுதவல்லி சமேத வேதநாராயணா் அமா்ந்த திருக்கோலத்திலும், மூல விமானத்தில் ஸ்ரீ தேவி -பூதேவி சமேத அழகிய மன்னாா் நின்ற திருக்கோலத்திலும் உற்சவா் ருக்மணி -சத்யபாமா சமேத ராஜகோபாலர் என 3 திருக்கோலங்களில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றாா்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சொர்க்கவாசல் திறப்பு
கடந்த 23-ந் தேதி வைகுண்ட ஏகாசதி விழா பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. நேற்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மூலவர் பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பிறகு ஐதீக முறைப்படி நடைபெற்ற வழிபாடுகளின் நிறைவில் ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி, சத்யபாமா சமதேராக புறப்பாடாகி வேத மந்திரங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க சொர்க்கவாசல் வழியே எழுந்தருளினார். அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷங்களை எழுப்பியவாறு பக்தர்கள் பெருமாளை பின் தொடர்ந்து சொர்க்கவாசல் வழியே வெளியே வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நெல்லையில் பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாங்குநேரி
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. காலையில் சுவாமி, வரமங்கைத் தாயார் மடியில் தலை வைத்து சயனகோலத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, வானமாமலை பெருமாள், வரமங்கை தாயார் பல்லக்கில் எழுந்தருளிய பின்னர் பல்லக்கு சொர்க்கவாசலை வந்தடைந்தது. பின்பு அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சேரன்மாதேவி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சேரன்மாதேவி பக்வத்சல பெருமாள் கோவிலில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வீதி உலாவும், கோவில் வெளியே அமைந்துள்ள காவல் தெய்வம் சங்கிலி பூததாருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை சேரன்மாதேவி தேசபந்து தெரு விஸ்வகர்மா சமுதாயத்தினர் செய்திருந்தனர்.
சேரன்மாதேவி நடுத்தெரு வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா வருதல் நடந்தது. சேரன்மாதேவி பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள ராமசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை சொர்க்கவாசல் திறப்பு மற்றும் சுவாமி வீதிஉலா வருதல் நடைபெற்றது.
இதேபோல் வீரவநல்லூரை அடுத்த அத்தாளநல்லூரில் உள்ள பழமையான கஜேந்திரவரத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
களக்காடு
களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் சன்னதி மண்டபத்தில் வரதராஜபெருமாள், வெங்கடாசலபதி சுவாமிகள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோன்று களக்காடு சந்தானகோபால கிருஷ்ண சுவாமி கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.