பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சொர்க்கவாசல் திறப்பு
கரூர் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து ரெங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் அதிகாலை 4.30 மணிக்கு மேள தாள முழங்க சொர்க்க வாசல் வழியாக ரெங்கநாதர் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமிக்கு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிறகு ரெங்கநாதர் ேகாவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா.... கோஷங்களுடன் ரெங்கநாதரை வழிபட்டு சென்றனர்.
பண்டரிநாதன் கோவில்
கரூர் மையப்பகுதியில் உள்ள பண்டரிநாதன் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நேற்று நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பண்டரிநாதன் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நீலமேகப்பெருமாள் கோவில்
குளித்தலையில் உள்ள நீலமேகப்பெருமாள் கோவில் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் ஆகிய 2 கோவில்களில் ெசார்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கோவில் உள்ள மூலவர் மற்றும் உற்சவருக்கு நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நீலமேகப் பெருமாள் கோவிலில் உள்ள மூலவர், உற்சவர் இக்கோவில் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவில் உள்ள மூலவர் ஆகிய சுவாமிகளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதுபோல லெட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த கோவில்களில் நேற்று காலை பரமபத வாசல் திறக்கப்பட்டதும், முதலில் உற்சவ பெருமாள் ெசார்க்க வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டார்.
திரளான பக்தர்கள் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்வதற்காக தனி இடத்தில் சுவாமிகள் வைக்கப்பட்டார். உற்சவ பெருமாள் ெசார்க்க வாசல் வழியாக சென்றதை தொடர்ந்து கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பொதுமக்கள் சொர்க்க வாசல் வழியாக சென்றனர். உற்சவருக்கு தேங்காய், வாழைப்பழம், துளசி, பூ போன்ற பொருட்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
வரதராஜ பெருமாள் கோவில்
வேலாயுதம்பாளையம் அருகே புஞ்சை தோட்டக்குறிச்சி சேங்கல்மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அதிகாலையில் சொர்க்க வாசல் வழியாக வரதராஜ பெருமாள் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடி நின்ற பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷம் எழுப்பினர். பின்னர் வரதராஜ பெருமாள் கோவிலை சுற்றி வந்து, மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.