நீலகிரியில் பள்ளிகள் திறப்பு; மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு


தினத்தந்தி 13 Jun 2023 6:00 AM IST (Updated: 13 Jun 2023 3:57 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. இதில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பாடங்களை படிக்க தொடங்கினர்.

நீலகிரி

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. இதில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் பாடங்களை படிக்க தொடங்கினர்.

பள்ளிக்கூடங்கள் திறப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வெளியூர்களுக்கு சென்றனர். இந்த நிலையில் நடப்பு மாத தொடக்கத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பள்ளிக்கூடங்கள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து 1 வாரம் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ந் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 14-ந் தேதியும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று காலை 8 மணிக்கு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது.

6 முதல் 12-ம் வகுப்புகள் தொடங்கியது

பின்னர் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் மிகுந்த ஆர்வமுடன் பள்ளிக்கூடத்துக்கு வந்தனர். தொடர்ந்து காலை பிரார்த்தனைக்குப் பிறகு மாணவர்கள், ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு சென்றனர். தொடர்ந்து ஆசிரியர்கள் பாடங்கள் நடத்த மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களைப் படிக்க தொடங்கினர்.

முன்னதாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவர்கள் பாடங்களை படிக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணியில் கல்வி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனால் ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிக்கூட மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. நாளை (புதன்கிழமை) 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது.


Next Story