1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு:உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்


1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு:உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:40 AM IST (Updated: 15 Jun 2023 4:14 PM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால் காலையில் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

கோடை விடுமுறைக்கு பின்னர் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால் காலையில் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் நிறைவு பெற்ற பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந்தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 12-ந்தேதி முதல் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நேற்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் கடந்த 12-ந்தேதி 5 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளி வகுப்புகள் திறக்கப்பட்டது. இதையடுத்து காலை முதல் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக புத்தகப்பையுடன் வகுப்பறைக்கு வந்தனர். மேலும் பள்ளிக்குழந்தைகளை அவர்களின் பெற்றோர் மோட்டார் சைக்கிள் மூலமும், பள்ளி வேன், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு அழைத்து வந்து விட்டு சென்றனர்.

இலவச பாடப்புத்தகங்கள்

இதில் சில பள்ளிக்குழந்தைகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கு வந்ததால் மகிழ்ச்சியுடன் வந்தனர். சில குழந்தைகள் புதிதாக பள்ளிக்கு சேருவதற்காக வரும் போது அழுத முகத்துடன் பள்ளிக்கு வந்தனர். முன்னதாக அந்தந்த நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் மூலம் தெளிக்கப்பட்டது.

பின்னர் முதல் நாள் பள்ளிகள் திறக்கப்பட்டதும் பள்ளி குழந்தைகளுக்கு அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அறிவுரைகள் மற்றும் நன்னடத்தை குறித்து பேசினர். முன்னதாக முதல் நாள் பள்ளி திறக்கப்பட்டதும் தமிழக அரசின் இலவச பாடப்புத்தகங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் மீண்டும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.


Next Story