கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாளையம்பட்டி வேணு கோபாலசுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சொர்க்கவாசலுக்கு தீப ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கங்கள் எழுப்பி சுவாமியை வழிபட்டனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் வான வேடிக்கைகள் முழங்க சுவாமி வீதி உலா நடைபெற்றது. அதேபோல அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்பரர் கோவிலிலும், பட்டாபிராமர் கோவிலிலும், கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மல்லாங்கிணறு
மல்லாங்கிணறு சென்னகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அலுவலகத்தில் அமைந்துள்ள வெங்கடேச பெருமாளுக்கும், ராஜபாளையம் கோதண்ட ராமருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
திருச்சுழி
திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரதராஜபெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வரதராஜ பெருமாளுக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து வரதராஜபெருமாளை தரிசனம் செய்தனர்.
சாத்தூர்
சாத்தூர் வெங்கடாசலபதி கோவில், விருதுநகர் அல்லம்பட்டியில் உள்ள கோவில், வத்திராயிருப்பு சேதுநாராயண பெருமாள் கோவில், மேல் அர்ச்சுனாபுரம் கிராமத்தில் அர்ச்சுனா நதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய மணவள ஸ்ரீ சந்தன பெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.