வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 3 Jan 2023 12:30 AM IST (Updated: 3 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

அழகிய நம்பிராயர் கோவில்

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிக் கொண்ட நம்பி, திருமலைநம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் எழுந்தருளியிருப்பது சிறப்பு மிக்கதாகும். பிரசித்திப் பெற்ற இக்கோவிலில் பகல் பத்து உற்சவம் கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் பெருமாளின் சயன காட்சி நடந்தது. தொடர்ந்து மதியம் அழகியநம்பி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து அழகியநம்பிராயர் பரமபத வாசல் வழியாக வெளி வந்து காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்- அம்பை

வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பெருமாள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்தனர்.

அம்பை அருகே உள்ள மன்னார்கோவிலில் பிரசித்திபெற்ற ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பெருமாள், சயன கோலத்தில் தாயார்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து 5.30 மணிக்கு சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் உலா வந்தார். தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும் அம்பை கிருஷ்ணன் கோவில், கல்லிடைக்குறிச்சி ஆதிவராக பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story