பைக்காரா, அவலாஞ்சி அணைகள் திறப்பு
தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால், பைக்காரா, அவலாஞ்சி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
ஊட்டி,
தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால், பைக்காரா, அவலாஞ்சி அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
உபரிநீர் வெளியேற்றம்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் மூலம் அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது. சமீபத்தில் மொத்தம் உள்ள 13 அணைகளில் 90 சதவீதம் தண்ணீர் நிரம்பி இருந்தது.
ஏற்கனவே குந்தா அணை, கிளன்மார்கன் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, பைக்காரா அணைக்கு வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் முழு கொள்ளளவான 100 அடியை எட்டியதால், பாதுகாப்பு 3 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் 145 அடியாக உயர்ந்ததால், பாதுகாப்பு கருதி வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட முக்குறுத்தி அணை நீர்மட்டம் 17½ அடியாகவும், 49 அடி கொள்ளளவு கொண்ட சாண்டிநல்லா அணை 48 அடியாகவும் அதிகரித்து உள்ளது.
மாயார் அணையின் 17 அடி கொள்ளளவில் 16½ அடியாகவும், 210 அடி கொள்ளளவு கொண்ட அப்பர்பவானி அணையின் நீர்மட்டம் 208 அடியாகவும், பார்சன்ஸ்வேலி அணையின் 77 அடி கொள்ளளவில் 76 அடியாகவும், 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணையின் நீர்மட்டம் 170 அடியாகவும், எமரால்டு அணையின் 184 அடி கொள்ளளவில் 180 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.