ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டினால் செல்லாது- வைத்திலிங்கம்


ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டினால் செல்லாது- வைத்திலிங்கம்
x

ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இன்றி அ.தி.மு.க. பொதுக் குழுவை கூட்டுவது செல்லாது என்று அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதலை உண்டாக்கி உள்ளது. தற்போது 2 பேரும் எதிரும், புதிருமாக உள்ளனர்.

கடந்த மாதம் 23-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேற்கொண்ட முயற்சியை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கோர்ட்டை நாடி முறியடித்தனர். எனினும் அந்த கூட்டத்தில் வருகிற 11-ந் தேதி மீண்டும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்படும். இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஏற்கனவே பொதுக்குழு கூட்டம் நடந்த சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைமை கழகம் என்ற பெயரில் தனித்தனியாக அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.

வைத்திலிங்கம் பேட்டி

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தேவை

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கான அழைப்பிதழை தலைமை கழகம் என்ற பெயரில் அனுப்புவது ஏற்புடையதல்ல. எடப்பாடி பழனி சாமி தரப்பினர் சர்வாதிகார போக்குடன் செயல்படுகின்றனர். ஜெயலலிதா இறந்த பின்னர் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. கட்சி ஒன்றுபட்டபோது பொருளாளர் பொறுப்பில்தான் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது.

எனவே தற்போது கட்சியின் பொருளாளரான ஓ.பன்னீர்செல்வத்திடம்தான் சின்னமும், கட்சியை வழி நடத்தும் அதிகாரமும் உள்ளது. எனவே பொருளாளர் ஒப்புதல் இன்றி தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டினாலும், அது செல்லாது.

பணம் மூலம் முயற்சி

ஒற்றை தலைமையை அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பவில்லை. தலைமை கழக பதவியில் இருப்பவர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள்தான் விரும்புகிறார்கள். இவர்கள் பணம், அதிகாரத்தை வைத்து பொதுக்குழு உறுப்பினர்களை இழுக்க பார்க்கிறார்கள்.

அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு, செல்வாக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்குதான் இருக்கிறது. ஒன்றாக, நன்றாக இருந்த இந்த இயக்கத்தை பதவி மோகத்தால் இந்த நிலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பாதையை விட்டு அ.தி.மு.க. விலகி சென்றுவிடுமோ? என்று தொண்டர்கள் அஞ்சுகிற நிலைமையை கொண்டு வந்திருக்கிறார்கள். இது கட்சிக்கு செய்கிற துரோகம் ஆகும். தற்போது அவர்கள் (எடப்பாடி பழனிசாமி தரப்பு) பொதுக்குழு என்ற பெயரில் பொதுக்கூட்டத்தை நடத்துவார்கள். ஆனால் அது சட்டப்படி செல்லுபடியாகாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story