எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு விரைவில் தொடங்கும் - மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு விரைவில் தொடங்கும் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில், மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பை இதுவரை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிடவில்லை.
இந்நிலையில், அறிவிப்புக்கான தாமதம் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் விளக்கம் அளிக்கையில்,
நீட் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்ற 67,000 மாணவர்களின் முழு விவரங்களை தேசிய தேர்வு முகமை இதுவரை தராததால், கலந்தாய்வுக்கான பணிகள் தாமதமாகி வருகின்றனர். எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவை ஓரிரு நாட்களில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அரசின் அனுமதியைப் பெற்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துவதற்கும், நேரடியாக நடத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும், அரசு எப்படி நடத்த வேண்டும் என்று உத்தரவிடுகிறதோ, அந்த முறையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.