ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் - கவர்னருக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்


ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் - கவர்னருக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
x

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னருக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுமையும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் நிழல் அரசாங்கங்களை நடத்த ஒன்றிய அரசு முனைந்து வருகிறது. தமிழகத்தில் ஆர்.என்.ரவி, கேரளாவில் ஆரிப் முகமதுகான், தெலுங்கானாவில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட கவர்னர்கள் கடைப்பிடிக்கும் போக்குகள் அரசியல் சாசனத்தை அத்து மீறுபவை. ஒன்றிய பா.ஜ.க அரசின் எதேச்சாதிகார செயல்பாட்டின் ஒரு பகுதியே. சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், அரசியல் சாசனம் மீறிய நடவடிக்கைகள், சட்டமன்றங்களை அவமதிக்கும் வகையில் மசோதாக்களை கிடப்பில் போடுவது என கவர்னர்களின் அத்துமீறல்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியே தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தருவதில் தாமதம். தற்போது அவசர சட்டமும் காலாவதியாகி விட்டது. இது உயிர் குடிக்கும் பிரச்சினை. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30 உயிர்கள் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. தாமதமாகிற ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் உயிர்களோடு விளையாடுகிற விபரீதமாக உள்ளது. ஆனால் கவர்னர் ரவி இதை உணர்ந்தும் ஒன்றிய அரசின் கைப்பாவையாக மட்டும் செயல்படுகிறார். கவர்னரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சட்டமன்றம் துவங்கிய முதல் நாளான அக்டோபர் 17, 2022 அன்றே ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. கவர்னருக்கும் அனுப்பப்பட்டது. நவம்பர் 10 வரை பதில் இல்லை, கவர்னர் தரப்பில் இருந்து விளக்கமும் கேட்கப்படவில்லை என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அதற்கு பிறகும் இரண்டு வாரம் கவர்னர் தரப்பில் அசைவில்லை. கவர்னரை நேரில் சந்திப்பதற்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

கடைசியில் நவம்பர் 24 அன்று கவர்னர் விளக்கம் கேட்கிறார். "முழுமையான தடை" என்பது சென்னை உயர்நீதி மன்ற ஆணைக்கு முரணானது என்பது கவர்னர் கேட்ட விளக்கம். தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள்ளாக பதில் தந்து விட்டது. இது "பகுதி தடை" தான்; "தேவையான அளவிற்கே" தடை விதிக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பு சட்டத்தின் 7 வது அட்டவணை பட்டியல் 2ல் உள்ள பிரிவுகளின்படியே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதற்கு பிறகும் கவர்னர் செய்த தாமதத்தால் அவசர சட்டமும் காலாவதியாகிவிட்டது.

மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கவர்னரை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story