"பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும்" - அமைச்சர் பொன்முடி
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிந்துவிட்டது. இருப்பினும் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வரும் 17-ந்தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக, தேர்வு முடிவு வெளியாகி 5 நாள்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.
பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும். கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்துக்கு இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலைக் கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.