கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்


கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்
x

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவுக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.

இந்த கலவரத்தில் பள்ளிக்கு தீ வைக்கப்பட்டதோடு, பள்ளி பஸ்கள், வாகனங்கள் தீ வைக்கப்பட்டு முற்றிலும் சூறையாடப்பட்டது. இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அருகில் உள்ள பாரதி, மகாகவி, மகாபாரதி, பாலாஜி மற்றும் வாசுதேவநகர் அருகில் உள்ள 3 கல்வி நிறுவனங்களில் வகுப்புகளை நடத்த ஆலோசனை செய்து வருகிறோம். முதல்-அமைச்சர் உத்தரவுப்படி நாளை முதல்(புதன்கிழமை) கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.

குறிப்பாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாரதி, குறிஞ்சி, பாலாஜி ஆகிய 3 தனியார் பள்ளிகளில் அடுத்த வாரம் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு சக்தி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள். மேலும் மாணவ-மாணவிகளை அழைத்து செல்வதற்காக அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் 50 பஸ்களையும் தர முன்வந்துள்ளன.

சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை

தனியார் பள்ளியில் நடந்த போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்துள்ளன. மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்க கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து கருத்துகளை கேட்டு உடனடியாக சான்றிதழ் பெற்றுத் தரப்படும்.

அதேபோல் அந்த பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்கள், பஸ் டிரைவர்களின் ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றிதழ்களும் பெற்றுத்தரப்படும்.

சக்தி மெட்ரிக் பள்ளிக்கு சமூக நலத்துறை சார்பில் 2 மாதத்துக்கு முன்பு விடுதி சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை பள்ளி நிர்வாகம் பின்பற்றவில்லை. மாணவி இறந்த சம்பவம் குறித்த வழக்கில் இது வலுசேர்க்கும் விதமாக இருக்கும். முறையாக அனுமதி பெற்று விடுதி நடத்த வேண்டும்.

பள்ளி நிர்வாகம் விளக்கம்

தனியார் பள்ளியில் கடந்த 13-ந்தேதி நடந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட விளக்கத்தை அவர்கள் எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளார்கள். இதை கலெக்டரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளி தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. இதில் கல்வி நிறுவனம் தவறு செய்திருந்தாலும் அல்லது வேறு நபர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story