சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது
புதுக்ேகாட்டையில், சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயருகிறது. கிலோ ரூ.80 ஆக அதிகரித்தது.
சின்ன வெங்காயம்
தக்காளி விலை கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு கடுமையாக உயர்ந்திருந்தது. அதன்பின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது, வீதிக்கு வந்தது. அதோடு மற்ற காய்கறிகளின் விலைகள் சற்றும் குறைந்தது. சின்ன வெங்காயம் விலையும் ஓரளவு சரிந்தது. புதுக்கோட்டையில் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை இருந்தது கிலோ ரூ.60 வரைக்கும் குறைந்திருந்தது.
இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. புதுக்கோட்டை உழவர் சந்தையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.80-க்கு நேற்று விற்றது. சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது. சில்லறை கடைகளில் இதனை விட சற்று கூடுதல் விலைக்கு விற்பனையாகுகிறது.
பீன்ஸ் கிலோ ரூ.100
புதுக்கோட்டை உழவர்சந்தையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருந்த காய்கறிகளின் விலைகளை விட தற்போது சிறிது அதிகரித்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.70-க்கு விற்றது நேற்று ரூ.100-க்கு விற்றது. இதேபோல கத்தரிக்காய் விலை ரூ.45-க்கு விற்றது நேற்று ரூ.70-க்கு விற்பனையானது. புதுக்கோட்டை உழவர் சந்தையில் விற்பனையான காய்கறிகள் சிலவற்றின் விலை விவரம் கிலோ கணக்கில் வருமாறு:- வெண்டைக்காய் ரூ.20-க்கும், புடலங்காய் ரூ.25-க்கும், பீர்க்கங்காய் ரூ.40-க்கும், பாகற்காய் ரூ.50-க்கும், சுரைக்காய் ரூ.15-க்கும், அவரைக்காய் ரூ.70-க்கும், முருங்கைக்காய் ரூ.80-க்கும், உருளை கிழங்கு ரூ.60-க்கும், கேரட் ரூ.40-க்கும், பீட்ரூட் ரூ.25-க்கும் விற்றது.
மளிகை பொருட்கள்
இதேபோல அரிசி விலையும் சற்று உயர்ந்திருப்பதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதில் 26 கிலோ கொண்ட அரிசி பைகளுக்கு தலா ரூ.100 வீதம் உயர்ந்திருப்பதாக கூறினர். இட்லி அரிசி ரூ.1,000-க்கும், நாட்டு பொன்னி அரிசி ரூ.1,370-க்கும், கா்நாடக பொன்னி அரிசி ரூ.1,440-க்கும் விற்கிறது. சில்லறை கடைகளில் இவற்றின் விலை வேறுபடும். இதேேபால மளிகை பொருட்களின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. சீரகம் கிலோ ரூ.850-க்கும், மிளகு ரூ.850-க்கும், துவரம்பருப்பு ரூ.175-க்கும், உளுந்தம் பருப்பு ரூ.135-க்கும், பாசிப்பயிறு ரூ.120-க்கும், கடலை பருப்பு ரூ.95-க்கும், மொச்சை ரூ.170-க்கும், வர மிளகாய் ரூ.260-க்கும் விற்கிறது.
எண்ணெய் விலை
இதேபோல எண்ணெய் விலையை பொறுத்தவரையில் பெரிய அளவில் ஏற்றம் இல்லை எனவும் சராசரியாக இருப்பதாக தெரிவித்தனர். 1 லிட்டர் நல்லெண்ணெய் (செக்) ரூ.320-க்கும், சாதா நல்லெண்ணெய் ரூ.160-க்கும், கடலை எண்ணெய் ரூ.210-க்கும், பாமாயில் ரூ.85-க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.180-க்கும் விற்கிறது. தீபாவளி பண்டிகை வருகிற நேரத்தில் எண்ணெய் விலை அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது.