சின்ன வெங்காயம் நடவு பணி


சின்ன வெங்காயம் நடவு பணி
x
தினத்தந்தி 21 Jun 2023 12:30 AM IST (Updated: 21 Jun 2023 5:34 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பகுதியில் சின்ன வெங்காயம் நடவு பணி தொடங்கியது.

தேனி

சின்ன வெங்காயம் சாகுபடி

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஜக்கம்மாள்பட்டி, பாலக்கோம்பை, வண்டியூர், சேட்பட்டி, அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, புதூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.

சித்திரை, வைகாசி, புரட்டாசி, ஐப்பசி, மாசி ஆகிய மாதங்களில் சின்ன வெங்காயம் நடவு பணி மேற்கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து ஆண்டிப்பட்டி பகுதியில் வெங்காயம் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடவு பணி தீவிரம்

இந்தப் பகுதிகளில் வழக்கமாக ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து சின்ன வெங்காயம் நடவு பணி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் 15 நாட்களுக்கும் மேலாகியும் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இருப்பினும் பருவமழையை நம்பி விதை வெங்காயத்தை நடும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

இதில் விதை வெங்காயத்தை விவசாய தொழிலாளர்கள் ஒருபுறம் தரம் பிரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்றொருபுறம் விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டே ஈர மண்ணில் விதை வெங்காயம் நடும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.50-க்கு வாங்கி நடவு செய்கிறோம். ஆனால் சாகுபடி செய்த பின்பு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானால் தான் கட்டுபடியாகும். இந்த ஆண்டு மகசூல் அதிகரித்து நல்ல விலை கிடைக்கும் என நம்பிக்கையில் இருக்கிறோம் என்றனர்.


Next Story