சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு 'ஒன் டூ ஒன்' பஸ் சேவை தொடக்கம்
சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு 'ஒன் டூ ஒன்' பஸ் சேவையை ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் கடந்த 1-ந்தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு ஒன் டூ ஒன் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று அந்த பஸ் சேவையை தொடங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார். அதன்படி, சங்கரன்கோவிலில் இருந்து நெல்லைக்கு ஒன் டூ ஒன் பஸ் சேவை தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு போக்குவரத்து மேலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் போக்குவரத்து பணிமனை மேலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பஸ் சங்கரன்கோவிலில் இருந்து தினமும் காலை 5.20 மணி, 8.20 மணி, 11.25 மணி, மதியம் 2.40 மணி, மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு செல்லும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து காலை 6.45 மணி, 9.55 மணி, மதியம் 1.10 மணி, மாலை 4.35 மணி, இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு சங்கரன்கோவிலுக்கு செல்லும்.