கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது


கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 1 Sept 2023 8:21 PM IST (Updated: 1 Sept 2023 8:34 PM IST)
t-max-icont-min-icon

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 13-வது நபராக அசாருதீன் என்பவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.

கோவை,

கோவை கார் குண்டு வெடிப்பில் 13ஆவது நபராக அசாருதீன் என்பவரை என்ஐஏ கைது செய்துள்ளது. அசாருதீனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு:-

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி, உமர் பரூக், பெரோஸ்கான், முகமது தவுபிக் ஆகியோரையும் கைது செய்தனர். இதுவரை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 11 பேர் மீது அண்மையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து 11 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 12-வது நபராக முகமது இத்ரீஸ் என்பவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


Next Story