ரயில்வே கேட் பழுதடைந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சீர்காழி அருகே புங்கனூரில், ரெயில்வே கேட் பழுதடைந்ததால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் இருந்து புங்கனூர் செல்லும் வழியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டின் வழியாக புங்கனூர், காடாகுடி, கோடங்குடி, நிம்மேலி, ஆதமங்கலம், மருதங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் ரெயில் வரும்போது இந்த கேட் மூடப்பட்டு, ரெயில் சென்றதும் திறக்கப்படும். வழக்கம்போல, நேற்று காலை 10 மணியளவில் இந்த ரெயில்வே கேட்டின் வழியாக ரெயில் வந்தபோது கேட் மூடப்பட்டது. ஆனால், ரெயில் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் இந்த ரெயில்வே கேட் திறக்கப்படவில்லை.
வாகன ஓட்டிகள் அவதி
இதனால், அந்த வழியாக செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். தங்களது வாகனங்களுடன் நீண்டநேரம் காத்திருந்தனர். அவசர தேவை மற்றும் வேலைக்கு சென்றவர்கள் சுமார் 5 கி.மீ. தூரம் சுற்றிச் சென்றனர். இதனையடுத்து ரயில்வே தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் மற்றும் ஊழியர்கள் போராடி பழுதை சீரமைத்தனர். இதனால், இப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு இந்த வழியாகத்தான் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நோயாளிகள் செல்வார்கள். வேலைக்கு செல்பவர்களும் இந்த வழியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று ரெயில்வே கேட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 1 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இனியும், இந்நிலை நீடிக்காதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.