நீடாமங்கலத்தில் ஒரு மணிநேரம் ரெயில்வே கேட் மூடல்


நீடாமங்கலத்தில் ஒரு மணிநேரம் ரெயில்வே கேட் மூடல்
x
தினத்தந்தி 1 Sept 2023 1:00 AM IST (Updated: 1 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் ஒரு மணிநேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

திருவாரூர்

நீடாமங்கலத்தில் ஒரு மணிநேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

ரெயில்வே கேட்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. நீடாமங்கலத்தில் உள்ள ரெயில்வே கேட் நெடுஞ்சாலையின் குறுக்காக உள்ளது. இந்த ரெயில்வே கேட் மூடப்படும் போதெல்லாம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

நீடாமங்கலம் வழியாக வேளாங்கண்ணி, நாகூர் போன்ற ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் ரெயில்வே கேட் மூடப்பட்டு ஒரு நாளைக்கு பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. ரெயில்வே கேட் மூடும் முன்பு நீடாமங்கலத்தை கடந்து விட வேண்டும் என அவசர அவசரமாக வாகனங்களை இயக்க வேண்டிய நிலையில் டிரைவர்கள் உள்ளனர்.

பயணிகள் அவதி

இந்த நிலையில் நேற்று காலை 5.5 மணிக்கு நீடாமங்கலம் ரெயில்வேகேட் சரக்கு ரெயில் பணி காரணமாக மூடப்பட்டது. அப்போது காலிப்பெட்டிகளை கொண்ட சரக்கு ரெயில் 2-வது நடைமேடையில் வந்து நின்றது. அதில் இருந்து என்ஜினை கழற்றி, திசை மாற்றினர். பின்னர் சரக்கு ரெயில் மன்னார்குடிக்கு 6.5 மணி அளவில் புறப்பட்டது.

இதையடுத்து ரெயில்வே கேட் காலை 6.7-க்கு திறக்கப்பட்டது. ஒருமணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக பல்வேறு ஊர்களுக்கு பஸ்சில் சென்ற பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

விரைந்து தொடங்க வேண்டும்

இவ்வாறு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நீடாமங்கலம் மேம்பாலம் திட்ட பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். தஞ்சையில் இருந்து நாகை வரையிலான இருவழிச்சாலை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story