ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம்தான்: தமிழக பா.ஜ.க. கருத்து
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம்தான் என்று தமிழக பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் தி.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. குடியரசு ஆனதற்கு பின்னர் நாட்டில் நடந்த 4 தேர்தல்களும் (1951, 1957, 1962, 1967) அப்படித்தான் நடந்தது. பின்னர் சில மாநில அரசுகள் கலைக்கப்பட்ட காரணத்தாலும், 1970-ம் ஆண்டு முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாலும் இந்த முறை வழிதவறி போனது.
வீண் செலவுகளை தவிர்க்கும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்களை செய்யவேண்டியது உள்ளது. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர் பட்டியல் மாற்றம், அரசியல் முறைகேடுகளை நீக்க வேண்டுமெனில் இந்த முறை சாத்தியமாக வேண்டும். இதனால் மாநில சுயாட்சி பாதிக்கும் என்பதெல்லாம் வலுவற்ற வாதங்கள்தான். எனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை முன்னெடுக்க வேண்டியது அவசியமே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.