ஒரே நாடு ஒரே தேர்தல்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமா?


ஒரே நாடு ஒரே தேர்தல்; வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமா?
x

நமது நாட்டில் தற்போது நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் தனித்தனியாக தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறு தனித்தனியாக நடத்தாமல் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பதே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதாகும். அதாவது வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வாக்களிக்க முடியும்.

அரியலூர்

இது ஒன்றும் புதிது அல்ல

1967-ம் ஆண்டு வரை, இந்திய நாடாளுமன்றத்துக்கு, மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. அப்போது வாக்குச்சீட்டுகள் மூலம், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டிகளில் ஒரே நேரத்தில் வாக்களிக்கப்பட்டு வந்து இருக்கிறது.

புரட்டிப்போட்டது

1968, 1969-ம் ஆண்டுகளில் அரசியலில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால், சில மாநிலங்களில் சட்டசபைகள் கலைக்கப்பட்டன. அதேபோல், 4-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலமும் 1971-ம் ஆண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், அதுவும் கலைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே (1970) தேர்தல் நடத்தப்பட்டது.

இது நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திவந்த முறையை புரட்டிப் போட்டு விட்டது. அன்று முதல் இரு தேர்தல்களும் தனித்தனியாகவே நடத்தப்பட்டு வருகின்றன.

அதற்கு ஏற்ப மக்களில் மனங்களிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. மாநில பிரச்சினைகளை சட்டமன்ற தேர்தலின் போதும், மத்திய பிரச்சினைகளை நாடாளுமன்ற தேர்தலின் போதும் எதிரொலித்து வருகிறார்கள். அதாவது சட்டசபையில் ஒரு கட்சிக்கு ஓட்டுப்போடும் ஒருவர், நாடாளுமன்ற தேர்தலில் வேறு ஒரு கட்சியை ஆதரிக்கும் நிலையும் இருக்கிறது.

வீண்செலவு

இவ்வாறு தனித்தனித் தேர்தல், அடிக்கடி நடைபெறுவதால், பல ஆயிரம் கோடி ரூபாய் வீண்செலவு ஏற்படுகிறது என்பதால் கடந்த 1983-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தல்களையும் மீண்டும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. ஆனால், மாநில அளவிலான கட்சிகள் அதை ஏற்கவில்லை.

தங்களின் தனித்துவம் பாதிக்கப்படும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தன. என்றாலும், எதிர்ப்புக்கு மத்தியிலும், இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வந்தன.

ஒரே நாடு; ஒரே தேர்தல்

2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, "ஒரே நாடு; ஒரே தேர்தல்" கோஷம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. தற்போது, இந்த திட்டத்தை அமல்படுத்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2024) தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் இந்தச் சூழ்நிலையில், எல்லா மாநில சட்டசபைகளையும் கலைத்துவிட்டு அதோடு சேர்த்து ஒரே தேர்தலாக நடத்தச் சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா? அது சரியா? அதற்கு என்ன சட்ட திருத்தங்கள் வேண்டும்? என்பன போன்ற கேள்விகளுக்கு பலர் சட்டநுணுக்கப் பதில்களை அளித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

வீண் குழப்பத்தை ஏற்படுத்தும்

ஓய்வு பெற்ற நீதிபதி நீதிபதி என்.கிருபாகரன்:- பொதுவாக நாடாளுமன்றத் தேர்தல் என்றால் தேசிய அளவில் உள்ள பிரச்சினைகள், தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும், சட்டசபை தேர்தல் என்றால் மாநிலங்கள் அளவில் நிலவும் பிரச்சினைகள் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் மக்கள் வாக்களிப்பார்கள்.

உதாரணத்திற்கு டெல்லியில் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் அங்குள்ள எம்.பி., தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தேசிய அளவில், மாநில அளவில் உள்ள பிரச்சினைகளை பிரித்து பார்த்து, தங்களுக்கு எது உகந்ததோ, அதன் அடிப்படையில் வாக்குகளை அளித்து வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது, ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சரியான முடிவாக இருக்காது, அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.

ஒரே நேரத்தில் இரு அவைகளுக்கும் தேர்தல் நடத்தும்போது, நிதி மற்றும் மனித ஆற்றல் மிச்சப்படும். எந்நேரமும் தேர்தல் என்கின்ற நிலை மாறும் என்கின்றனர். ஆனால் அது சரியாக இருக்காது. தமிழகத்தில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கும், 2021-ம் ஆண்டு சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இடைவெளி இருக்கிறது. 2021 முதல் 3 ஆண்டு இடைவெளி விட்டே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.

1998-ம் ஆண்டு ஒரு தேநீர் விருந்தில் பா.ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. அதுபோல் மத்திய அரசு கவிழ்ந்தாலோ அல்லது மாநில அரசுகள் கலைக்கப்பட்டாலோ மறுபடியும் அதற்கு எப்போது தேர்தல் நடத்துவது? என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. அதனால் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது. அதனால் வீண் குழப்பத்தையே ஏற்படுத்தும்.

சட்ட திருத்தம்

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் நர்மதா சம்பத்:- நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் பொருளாதார நிதி மிச்சப்படுவதுடன், மனித உழைப்பும் மிச்சப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்றால், இடைப்பட்ட காலத்தில் மற்ற பணிகள் நடைபெறும் என்றும், ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு மாநிலத்தில் தேர்தல் என்கின்ற நிலை மாறும் என்றும் மத்திய அரசு நினைக்கிறது.

இதற்காக, 2015-ம் ஆண்டு நாடாளுமன்ற நிலை குழு அறிக்கை, 2018, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் சட்ட கமிஷன் அறிக்கைகள் ஆகியவை பெறப்பட்டுள்ளது. ஆனால், நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்று ஒரு முடிவு எடுக்கும் பட்சத்தில், அரசியல் அமைப்பு சாசனத்தில், 83, 85, 172, 174, 356 ஆகிய பிரிவுகளில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மேலும் இந்த சட்ட திருத்தம் ஏன் கொண்டு வர வேண்டும், இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன் என்பது உள்ளிட்ட விளக்கத்தை மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில், இந்த சட்ட மசோதா நிறைவேற வேண்டும் என்றால், எல்லா மாநிலங்களில் இருந்தும் மக்கள் பிரதிநிதிகளின் 50 சதவீதம் ஆதரவு வேண்டும்.

எனவே, இது நீண்ட நெடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொண்டுவர வேண்டிய திட்டமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி ஆராய்ந்து கொடுக்கும் அறிக்கையின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் நன்மையா?, தீமையா? என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

அரசியலமைப்பு சட்டம்

அரியலூரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார்:- மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக அதிகார அமைப்புகளை கொண்டதாக அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இதில் மத்திய அரசுக்கு ஏற்கனவே அதிகப்படியான அதிகார பலன்கள் உள்ளன. சட்டம் ஏற்றும் அதிகாரம் மத்திய அரசின் கையில் இருந்த போதிலும் மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷம் எழுப்பப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமா? என்று முதலில் பார்க்க வேண்டும். மாநில அரசில் பொருளாதார நெருக்கடி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, அயல்நாடு ஒரு மாநிலத்தில் படையெடுத்தல் போன்ற நேரங்களில் ஆட்சியை கலைத்து விட்டு கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும். அந்த நேரத்தில் ராணுவ கட்டுப்பாடு சூழ்நிலையில் கூட அமையலாம். அதன் பிறகு அந்த மாநிலத்திற்கு மட்டும் தேர்தல் வைக்கக்கூடிய நிலை ஏற்படும்.

மாநில கட்சிகள்

உடையார்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன்:- ஒவ்வொரு மாநிலங்களிலும் பருவ நிலைமாற்றங்கள் நிலவும் போது எப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திட முடியும். அப்படி நடத்தினாலும் அதனால் என்ன பயன். பிராந்திய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து 'இந்தியா' என்ற கூட்டணி உருவாக்கியதில் இருந்தே இந்த கூட்டணியை வலுவிழக்க பல திரைமறைவு நாடகங்களை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது. முதலில் நாடாளுமன்ற தேர்தலை ஒரே தேதியில் நடத்தி முடிக்கட்டும். புதிய அரசு வந்து ஒரே நேரத்தில் மாநில தேர்தலை நடத்தட்டும். சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்தினால் மாநில கட்சிகள் எல்லாம் மாநிலத்தில் மட்டுமே கவனம் செலுத்தும். இதனால் தான் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தலில் முனைப்பு காட்டுகிறது.

சிறந்த திட்டம்

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த கேட்டரிங் கல்லூரி மாணவர் சிவதாஸ்:- மத்திய அரசு சமீபத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என்று கூறியுள்ளது. இது ஒரு சிறந்த திட்டமாகத்தான் தெரிகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் அடிக்கடி தேர்தல் நடத்துவதால் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. எனவே ஒரேநாடு, ஒரே தேர்தல் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாவது தடுக்கப்படும். ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கும்போது பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. அப்படி இருக்கும் போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அது சாத்தியப்படுமா? என கேள்வி எழுகிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்களை கொண்டு குழு அமைத்து நன்றாக ஆராய்ந்து இதில் ஏற்படும் பாதக, சாதகங்களை ஆராய்ந்து பின்பு நல்ல ஒரு முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

கேள்விக்குறியாகும் மாநில சுயாட்சி

தா.பழூரை சேர்ந்த தங்கையன்:- மத்திய, மாநில அரசுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது. இந்தநிலையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் மத்தியில் எந்த கட்சியின் அரசு அமைகிறதோ அதே கட்சியின் அல்லது அதனுடைய கூட்டணி கட்சியின் ஆட்சி தான் மாநிலங்களில் அமைவதற்கான சாத்திய கூறுகள் இருக்கும். அப்படி இருந்தால் மாநில சுயாட்சி கேள்விக்குறியாகும். ஒரு ஆட்சியை கலைத்து நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது தேவையற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story