ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஒரே நாடு ஒரே தேர்தல்:  பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Sep 2024 7:22 AM GMT (Updated: 19 Sep 2024 7:53 AM GMT)

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் ஓட்டுப்பதிவுக்கு வகை செய்யும் 'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு' பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட ஒப்புதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றதும், இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாததும், கூட்டாட்சியியலைச் சிதைப்பதும் ஆகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சினைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒவ்வாதது.

எதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும். இந்த முன்மொழிவு என்பதே மொத்தத்தில் பாஜகவின் ஆணவத்தைத் திருப்திப்படுத்துவதற்கான நகர்வுதானே ஒழிய, இதனை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. இந்திய ஜனநாயகம் ஒற்றைக் கட்சியின் பேராசைக்கு ஏதுவாக வளைக்கப்படலாகாது.

மத்திய அரசானது இத்தகைய திசை திருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களைச் சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story