ஸ்ரீவைகுண்டத்தில் கந்து வட்டி வழக்கில் ஒருவர் கைது - 22 ஆவணங்கள் பறிமுதல்...!
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கந்து வட்டி வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்த 22 ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் நம்பி (49). இவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நிலத்தின் ஆவணங்களை அடமானமாக வாங்கிக் கொண்டு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை வட்டிக்கு கடன் கொடுத்து அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நம்பி என்பவர் கடந்த 9-ந் தேதி ஸ்ரீவைகுண்டம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் நம்பி வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது அவரது வீட்டிலிருந்து தொகை நிரப்பப்படாமல் கையெழுத்துக்கள் மட்டும் போடப்பட்ட 6 காசோலைகள் உட்பட 26 காசோலைகள் உள்ள ஒரு காசோலை புத்தகம், கடன் பெற்றவர்களின் 3 ஏ.டி.எம் கார்டுகள், கைரேகை மற்றும் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட ஒரு வெற்று பத்திரம்,
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் நாசரேத் ஆகிய சார்பதிவாளர் அலுலவலகங்களில் பத்திரபதிவு நடைபெற்ற வீடியோக்கள் பதிவு செய்யப்பட்ட 6 சிடிக்கள்,
காசோலை மோசடி வழக்கு சம்மந்தமான ஆவணம், கடன் பெற்ற 2 பேர்களின் இரு சக்கர வாகனங்களின் ஆர்.சி.புத்தகங்கள் உட்பட 22 ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பா நம்பியிடம் விசாரணை நடத்திய போலீசார் இன்று அவரை ஶ்ரீவைகுண்டம் கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கந்துவட்டி குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.