தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு ஒருமுறைதூய்மை பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும்: ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் கோரிக்கை


தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு ஒருமுறை தூய்மை பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை தூய்மை பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. கூட்டத்துக்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

தூய்மை பணியாளர்கள்

தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத் தலைவர் இ.கிருஷ்ணராஜ், பொதுச்செயலாளர் பி.லோகநாதன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, வருங்கால வைப்பு நிதி பிடித்தம், இ.எஸ்.ஐ மருத்துவ வசதி போன்றவை இல்லை. மேலும் வேலை பளு, அதிக வேலை நேரம் உள்ளிட்டவைகளால் தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தூய்மை பணியாளர்களின் குறைகளை தீர்க்க சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தூய்மை பணியாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை கலெக்டர் தலைமையில் நடத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

வீட்டுமனைப்பட்டா

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 75) கொடுத்த மனுவில், எனது தந்தை சண்முகம் சுதந்திர போராட்ட தியாகி. கடந்த 1973-ம் ஆண்டு சுதந்திர தின வெள்ளி விழாவை முன்னிட்டு அவருக்கு அப்போதைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி செப்பு பட்டயம் வழங்கினார். நாங்கள் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளியான எனது மகனுக்கு தொழில் செய்ய கடன் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

நடவடிக்கை

ஓ.பி.எஸ். அணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் துறைமுக மேம்பால ரவுண்டானா சர்வீஸ் ரோடு மற்றும் முத்தையாபுரம் பகுதியில் சாலையின் இருபுறமும் கனரக லாரிகளை நிறுத்தி வைப்பதால் வாகன போக்குவரத்துக்கு இடையூறாகவும், பாதசாரிகளுக்கு இடையூறாகவும் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் பாண்டியாபுரம் பெண்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மணிகண்டராசா தலைமையில் கொடுத்த மனுவில், குலையன்கரிசல் பாண்டியாபுரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந் 55 குடும்பங்கள் வசதித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், தனி சுடுகாடு, ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story