ஓணம் பண்டிகை: குன்னூர் - உதகை இடையே இன்றும் நாளையும் சிறப்பு மலை ரெயில் இயக்கம்
ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் மலை ரெயிலில் பயணம் மேற்கொள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, ஓணம் விடுமுறை தினங்களையொட்டி சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்களை இயக்குவதென தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி குன்னூரில் இருந்து ஊட்டி வரை விநாயகர் சதுர்த்தியையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. தொடர்ந்து, கேரளாவின் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுமென ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, இன்றும் நாளையும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு தலா ஒருமுறை சிறப்பு ரெயிலும், ஊட்டி-கேத்தி இடையே 3 முறை சிறப்பு சுற்று ரெயிலும் இயக்கப்பட உள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் உற்சாகம் அடைந்து உள்ளனர். இதனால் மலை ரெயில் வழித்தடங்களில் இருக்கும் ரெயில் நிலையங்களில் தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.