தீரன் சின்னமலை நினைவுநாளில், அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை


தீரன் சின்னமலை நினைவுநாளில், அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
x

தீரன் சின்னமலை நினைவுநாளில், அவரது தியாகங்களை நினைவுகூர்ந்து போற்றுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய நாடு இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு அல்லலுற்றுக் கிடந்தபோது, இந்திய நாட்டின் விடுதலைக்காக பாரதம் முழுவதும் தன்னலமற்ற தியாகிகள் பலர் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஈந்து பாடுபட்டனர்.

இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டிலும் பல தலைவர்கள் தோன்றி தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இவ்வாறு தம் வாழ்வைத் துச்சமென மதித்து அன்னை பாரதத்தின் அடிமைத்தளையைத் தகர்த்தெறிந்த பல சான்றோர்களில் மிக முக்கியமானவர் தீரன் சின்னமலை அவர்கள்.

வாள், சிலம்பம், மல்யுத்தம் என அனைத்து போர்ப் பயிற்சிகளையும் கற்றுக்கொண்டதோடு, சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் நடுவே வாழ்ந்து, தனக்கென ஒரு பாதை அமைத்து, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பிரிட்ஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஆர்ப்பரித்து, ஆங்கிலேய ஆதிக்கத்தை தடுக்கும் பெருமலையாக விளங்கியவர் மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான பல போர்களில் வெற்றி பெற்ற தீரன் சின்னமலை அவர்களை எளிதில் வெல்ல முடியாது என முடிவு செய்த ஆங்கிலேயப் படையினர் சூழ்ச்சியால் அவரை கைது செய்து, சங்ககிரி கோட்டைக்கு அழைத்துச் சென்று அவரை தூக்கிலிட்டனர். மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக செலவிட்டு இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தன் உயிரை அர்ப்பணித்தாலும், அவர் திருக்கோயில்களுக்கு செய்த திருப்பணிகளும், அவர் அளித்த கொடைகளும், தர்மங்களும் ஏராளம்.

இந்திய விடுதலைக்காக போராடிய மாவீரர் தீரன் சின்னமலை அவர்களை கௌரவிக்கும் வகையில் தீரன் சின்னமலை போக்குவரத்துக் கழகம் எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்டது என்பதையும், கரூரைத் தலைநகராகக் கொண்டு தீரன் சின்னமலை மாவட்டம் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மாவீரர் தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றும் வகையில், ஜெயலலிதா, சென்னை, அண்ணா சாலையில் தீரன் சின்னமலையின் முழு உருவ வெண்கலச் சிலையை அமைத்ததையும், அந்தப் பணிக்கென ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியதையும், 1995 ஆம் ஆண்டு தீரன் சின்னமலைக்கு காங்கேயத்தில் அரசு சார்பில் நினைவு விழாவினை நடத்தி, அவ்விழாவில் அவரது வாரிசுகளுக்கு மரியாதை செய்ததையும், தீரன் சின்னமலை பிறந்த இடமான ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில், அவரது நினைவு நாளான, ஆடி மாதம் 18 ஆம் நாளினை அரசு விழாவாக அனுசரிக்க உத்தரவிட்டதையும், அவரை கௌரவிக்கும் வகையில் ஓடாநிலையில் அவரது மணிமண்டபத்தை திறந்து வைத்ததையும், மாவீரர் தீரன் சின்னமலையைத் தூக்கிலிட்ட இடமான, சங்ககிரியில், அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்துக் கொடுத்ததையும் அவரது நினைவு நாளில் நினைவுகூர்ந்து, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக அவர் செய்த தியாகங்களை நினைத்துப் பார்த்து, அவருக்கு எனது மரியாதையினையும், வீர வணக்கத்தினையும் பணிந்து தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவீரர் தீரன் சின்னமலையின் பெருமைமிக்க அடிச்சுவட்டில் நாமும் பயணித்து நாட்டுப் பற்றுடன் வாழ்வோம் என அவரது நினைவு நாளில் நாம் உறுதி ஏற்போம். மாவீரர் தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றுவோம்! அவர் வழி நடப்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story