காதலர் தினத்தையொட்டி.. மாமல்லபுரத்தில் குவிந்த காதல் ஜோடிகள்


காதலர் தினத்தையொட்டி.. மாமல்லபுரத்தில் குவிந்த காதல் ஜோடிகள்
x

காதலர் தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் காதல் ஜோடிகள் குவிந்தனர்.

செங்கல்பட்டு

காதலர்களுக்காக போராடிய கிறிஸ்தவ பாதிரியார் வாலன்டைன் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந்தேதியை, காதலர் தினமாக கொண்டாடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் ஏராளமான காதல் ஜோடிகள் வருகை தந்து காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

நேற்று சாரை, சாரையாக காதல் ஜோடிகள் மோட்டார் சைக்கிளிலும், பஸ்சிலும் வரத்தொடங்கினார்கள்.

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். அவர்கள் வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், கணேசரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து கடற்கரை கோவில், ஐந்து ரதம் பகுதியில் உள்ள கடைகளில் காதலர் தினத்தையொட்டி காதலர்கள் தங்கள் மனம் கவர்ந்த பரிசுப்பொருட்களை காதலிக்கு வாங்கி கொடுத்தனர்.

சில பெண்கள் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத வகையில் சுடிதார் துப்பட்டாவல் முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் காதலனுடன் வலம் வந்தனர். காதல் ஜோடிகள் சிலர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். சில காதல் ஜோடிகள் கலங்கரை விளக்கத்தில் உள்ள மலைக்குன்றில் காதல் சின்னங்களையும், தங்கள் பெயர்களையும் பெயிண்டால் எழுதிவிட்டு சென்றனர். குறிப்பாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பலரும் தங்கள் காதல் கைக்கூடியதை கொண்டாடும் வகையில் காதலர் தினமான நேற்று மாமல்லபுரம் வந்திருந்ததை காண முடிந்தது. காதல் ஜோடிகள் அதிக அளவில் திரண்டதால் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளிலும் கடலில் இறங்கி சில ஜோடிகள் குளிக்க முயன்றனர்.

அப்போது அவர்களை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் ரோந்து வந்த போலீசார் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம், ஆபத்தான கடல் பகுதி என அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பியதையும் காண முடிந்தது. குறிப்பாக காதல் ஜோடிகளால் மாமல்லபுரம் நேற்று களைகட்டியது எனலாம்.


Next Story