ரம்ஜான் பண்டிகையையொட்டிபள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி, பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
ரம்ஜான் பண்டிகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று, பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. அதன்படி, கம்பம் புதுப்பள்ளிவாசல், முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், டவுன் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் வாவேர் பள்ளிவாசலுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து ஜமாத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஈத்கா மைதானத்துக்கு சென்றனர்.
பின்னர் அங்கு கம்பம் தலைமை இமாம் அலாவுதீன் பாக்கவி சிறப்பு தொழுகையை நடத்தினார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் ஊர்வலம் தொடங்கியது. கம்பம் பாரஸ்ட் சாலை, எல்.எப். மெயின்ரோடு, கம்பம்மெட்டு சாலை, சுங்கம் தெரு வழியாக சென்று வாவேர் பள்ளி வாசலில் ஊர்வலம் முடிந்தது.
சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி புதுப் பள்ளிவாசல், வாவேர் பள்ளி தெரு, கம்பம்மெட்டு காலனி, மைதீன் ஆண்டவர் பள்ளி, தாத்தப்பன்குளம், ஓடைக்கரை தெரு உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது.
பெரியகுளத்தில் வடகரை பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதைெயாட்டி பெரியகுளத்தில் உள்ள 9 பள்ளிவாசல்களில் இருந்து முஸ்லிம்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் ஈத்கா மைதானத்திற்கு சென்று அவர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அங்கு ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இந்த தொழுகையில் அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் உத்தமபாளையம் பெரிய பள்ளி வாசல் ஜமாத் கமிட்டி தலைவர் தர்வேஷ் மைதீன், தேரடியில் இருந்து ஊர்வலம் நடைபெற்றது. இதில் நகரில் உள்ள கோட்டைமேடு, ஷாபி, களிமேடு பட்டி, பி.டி.ஆர்.காலனி உள்ளிட்ட ஜமாத் கமிட்டியினர், குழந்தைகள், பெரியவர்கள் என கலந்து கொண்டு புத்தாடைகள் அணிந்து ஊர்வலமாக ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு இமாம் மதார் மைதீன் உலவி தலைமையில் நடந்த சிறப்பு தொழுகையில், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். மேலும் போடி புதூர் பள்ளிவாசலிலும் சிறப்பு தொழுகை நடந்தது.