பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்


பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்
x

பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 30 கிலோ கொண்ட சிப்பம் ரூ.1,300-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

கரும்பு சாகுபடி

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கவுண்டன் புதூர், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, கரைப்பாளையம் நன்செய் புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சக்கரை தயாரிக்கின்றனர்.

தைப்பொங்கல்

தயார் செய்யப்பட்ட வெல்லங்களை நன்றாக உலர்த்தி 30 கிலோ எடை கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றனர். தயாரிக்கப்பட்ட வெல்லம் சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். வெல்ல சிப்பங்களை வாங்கிய வியாபாரிகள் திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மற்றும் ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

இந்தநிலையில் வருகிற 15-ந் தேதி தைப்பொங்கலும், 16-ந் தேதி மாட்டுப் பொங்கலும் வருகிறது. தை முதல் நாள் கால்நடைகள் வளர்க்காதவர்கள் அதிகாலையில் சூரியனுக்கு வெண்பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல் 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று ஆடு, மாடுகள் வைத்திருப்பவர்களும், விவசாயிகளும் தங்கள் மாட்டுத் தொழுவத்தில் உள்ள உழவுக்கு பயன்படும் மாடுகளுக்கும், தங்கள் பட்டியில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கும் வெண்பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழர்களும் வெண் பொங்கலுடன் சக்கரை பொங்கல் வைப்பார்கள். அதன் காரணமாக ஏராளமான உருண்டை வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் தேவைப்படுகிறது. அதன் காரணமாக நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் உருண்டை மற்றும் அச்சு வெல்லங்களை தயார் செய்யும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு தயாரிக்கப்படும் வெல்லம் சிப்பங்களை வியாபாரிகள் உடனுக்குடன் வாங்கி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இதன் காரணமாக நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் தொழிலாளர்கள் அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து வெல்லங்களை தயார் செய்து வருகின்றனர். கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,200-க்கும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,180-க்கும் விற்பனையானது. இந்த வாரம் உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1,300-க்கும், அச்சு வெல்லம் சிப்பம் ரூ.1,320-க்கும் விற்பனையானது. பொங்கல் பண்டிகையையொட்டி வெல்லம் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெல்லம் வழங்க கோரிக்கை

இந்தநிலையில் தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி சர்க்கரை ஒரு கிலோ வழங்குகிறது. எனவே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்க்கரைக்கு பதிலாக விவசாயிகளிடமிருந்து உருண்டை வெல்லங்களை கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story