மகாளய அமாவாசையையொட்டிசுருளி அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்


மகாளய அமாவாசையையொட்டிசுருளி அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM (Updated: 14 Oct 2023 6:45 PM)
t-max-icont-min-icon

மகாளய அமாவாசையையொட்டி சுருளி அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

தேனி

கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சிறந்த சுற்றுலா தலம், ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் மாதந்தோறும் அமாவாசையன்று இந்த அருவியில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி நேற்று, தர்ப்பணம் செய்வதற்காக சுருளி அருவி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் இந்த அருவியில் நீராடி அங்குள்ள சுருளி ஆண்டவர், சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து சுருளி ஆற்றங்கரையில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதற்கிடையே நேற்று மாலை ஹைவேவிஸ் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அங்குள்ள தூவானம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் சுருளி அருவிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர கம்பம் பகுதியிலும் மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அருவியில் நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் சுருளி அருவியில் அடிக்கடி யானை கூட்டம் வந்து செல்வதால் அதையும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story