கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 21-ந் தேதி பந்தக்கால் முகூர்த்தம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி வருகிற 21-ந் தேதி நடக்கிறது.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இக்கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 10-ம் நாள் அதிகாலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
தீபத் திருவிழா
இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 26-ந் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்தம் நிகழ்ச்சி வருகிற 21-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் நடைபெற உள்ளது.
அப்போது கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.
மேலும் பந்தக்காலுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் அர்்ச்சகர் பந்தக்காலை ராஜகோபுரம் வரை சுமந்து வந்து அங்கு பந்தக்காலிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்படும்.
அதன்பின்னர் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான அனைத்து பணிகளும் தொடங்கும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.