காமராஜர் பிறந்தநாளையொட்டிமினி மாரத்தான் ஓட்டம்:போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
காமராஜர் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் ஓட்டம் தேனியில் நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்கள் சார்பில், தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இந்த மினி மாரத்தானை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார்.
6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவிகளுக்கு 3 கி.மீ. தூரம், 6 முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 4 கி.மீ. தூரம், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 5 கி.மீ. தூரம், கல்லூரி மாணவிகளுக்கு 3 கி.மீ. தூரம் என மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 50 இடங்களை பிடித்தவர்களுக்கு டி-சர்ட் வழங்கப்பட்டது. முதல் 5 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் 2-வது நாளாக ரத்ததான முகாம் நடந்தது.
இதேபோல், மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திறனறியும் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமையில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் உருவ சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ஜெயராம் நாடார் மற்றும் நிர்வாகிகள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், நாடார் சரசுவதி அனைத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.