விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுதூத்துக்குடி மார்க்கெட்டில் அருகம்புல் மாலை, பூக்கள் விற்பனை விறுவிறுப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மார்க்கெட்டில் அருகம்புல் மாலை, பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூமார்க்கெட்டில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதனால் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்டி இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தல், விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. இதனால் விநாயகருக்கு உகந்த அருகம்புல், துளசி மற்றும் பூக்களும் அதிக அளவில் விற்பனைக்காக தூத்துக்குடி மார்க்கெட்டில் குவிக்கப்பட்டு உள்ளன.
மேலும் நேற்று ஆவணி மாதத்தின் கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதால் ஏராளமான திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகள் நடந்தன. இதனால் நேற்று முன்தினம் ஒருகிலோ மல்லிகைப்பூ ரூ.1500-க்கும், பிச்சப்பூ ரூ.1500-க்கும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரம் என்று பூக்களின் விலை கடுமையாக அதிகரித்து இருந்தது. ஆனால் நேற்று அதிக அளவில் பூக்கள் மார்க்கெட்டு வந்து குவிக்கப்பட்டதால், பூக்களின் விலை சற்று குறைந்து விற்பனையானது.
விலை விவரம்
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.1000-க்கும், பிச்சிப்பூ ரூ.1000, கனகாம்பரம் பூ ரூ.1000, செண்டு பூ கிலோ ரூ.20-க்கும், கோழிக் கொண்டை பூ ரூ.30, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, பச்சை ரூ.30. ஒரு தாமரை ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி, ஓட்டப்பிடாரம் பகுதியில் இருந்து அருகம்புல் மற்றும் துளசியும் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. ஒரு பாக்கெட் அருகம்புல் ரூ.20-க்கும், ஒரு கட்டு துளசி ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இது குறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும் போது, விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு பூக்களின் விற்பனை வழக்கம் போல இருந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர். அருகம்புல், துளசி அதிகளவில் விற்பனையானது. அனைத்து பூக்களின் விலையும் நேற்றைவிட இன்று குறைந்தே காணப்படுகிறது என்று கூறினார்.