ஆயுதபூஜையையொட்டி பொரி தயாரிக்கும் பணி தீவிரம்
கரூரில் ஆயுதபூஜையையொட்டி பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
ஆயுதபூஜையின் சிறப்பு
நாம் கற்ற கல்வியும், செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்களாக கருதப்படுகின்றன. அந்தவகையில் கல்வியில் மேன்மை பெறவும், தொழிலுக்கு மரியாதை செலுத்தி இனியும் சிறப்பாக நடக்க கடவுளின் அருளை பெறும் விதமாகவும் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையில் முக்கிய அம்சமாக ஆயுதபூஜை விழாவினை கொண்டாடுகிறோம்.அன்றைய தினம் தொழில் நிறுவனங்கள், கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் எந்திரம் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்து பூஜை நடத்துவர். வீடுகளில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் தங்களது குழந்தைகளின் புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவற்றை வைத்து கடவுளை வழிபடுவர். இத்தகைய வழிபாட்டு நிகழ்ச்சியின் போது பொரி, அவல், பொரி கடலை, நிலக்கடலை, பழ வகைகள், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை கடவுளுக்கு படைப்பது உண்டு. இதில் பொரி முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பொரி தயாரிக்கும் பணி
அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (திங்கட்கிழமை) ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கரூரில் பாரம்பரியமாக பொரி தயாரிக்கும் நிறுவனங்களில் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே சீனிவாசபுரம் பகுதியில் பொரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தினர், தற்போது ஆயுதபூஜையையொட்டி அந்த பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கென அந்த பகுதியில் தனியாக ஒரு சிறிய ஆலை அமைத்து நவீன எந்திரங்கள் மூலம் அரிசியை பக்குவப்படுத்தி பொரியாகவும், நிலக்கடலையை வறுக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலக்கடலை
இது குறித்து பொரி தயாரிக்கும் தொழிலாளர்களிடம் கேட்ட போது கூறியதாவது:- அனைத்து வகை அரிசியிலும் பொரி தயாரிக்கமுடியாது. எனவே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஐ.ஆர்.50, ஐ.ஆர்.64 என்கிற ரக அரிசியை கொள்முதல் செய்து வருகிறோம். பின்னர் அந்த அரிசியை தண்ணீரில் ஊற வைத்து உப்பு, நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றை சேர்த்து காய வைக்க வேண்டும். பின்னர் அதனை மிதமாக சூடேற்றுவது உள்ளிட்ட பக்குவங்களை செய்ய வேண்டும். பின்னர் பொரி தயாரிக்கும் உலையின் கீழ்பாகத்தில் மரத்துண்டுகளை போட்டு எரித்து வெப்பப்படுத்த வேண்டும். அப்போது அந்த பக்குவப்படுத்தப்பட்ட அரிசியை அந்த எந்திரத்தில் போட்டு பொரியாக தயாரிக்கப்படுகிறது. இதே போல் நவீன மோட்டார் எந்திரம் மூலம் நிலக்கடலையை வறுத்து பக்குவப்படுத்தும் பணிகளும் இங்கு நடக்கிறது, என்றனர்.
விலை விவரம்
தற்போது ஒரு மூட்டை பொரி ரூ.700-க்கு விற்பனையாகி வருகிறது. சில்லரை விலையில் ஒரு பக்கா பொரி ரூ.15-க்கு விற்கப்படுகிறது. நிலக்கடலை ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொட்டு கடலை ஒரு கிலோ ரூ.130-க்கு விற்கப்படுகிறது.கடந்த ஆண்டை போல இந்தாண்டும் பொரி விற்பனை நடைபெற்று வருகிறது. தற்போது கரூர், வெள்ளியணை, க.பரமத்தி, உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தேடி வந்து பொரியினை கொள்முதல் செய்கின்றனர். தற்போது நவராத்திரி கொலு வைத்து வழிபாடு நடத்துபவர்கள் பூஜைகளுக்கு பாக்கெட் பொரிகளை அதிக அளவில் வாங்கி செல்வதை காண முடிகிறது.