கூடலூர் மெயின்பஜார் வீதியில் சாலையில் திடீரென சாய்ந்த மின்கம்பம்


கூடலூர் மெயின்பஜார் வீதியில் சாலையில் திடீரென சாய்ந்த மின்கம்பம்
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் மெயின்பஜார் வீதியில் சாலையின் திடீரென மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

கூடலூர் நகர பகுதியில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையோர மரங்கள் வெட்டப்படுகின்றன. மேலும் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நகர் பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் மெயின்பஜார் வீதி பிள்ளையார் கோவில் எதிரில் உள்ள மின்கம்பம் திடீரென்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. அப்போது மின்கம்பம் சாய்ந்து எதிரே இருந்த மரக்கிளைகள் மீது விழுந்தது. இதனால் வீடுகளில் இருந்து கம்பத்தில் இணைக்கப்பட்ட வயர்கள் சாலையில் தொங்கின. பொதுமக்கள் யாரும் வராததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதையடுத்து அப்பகுதி மக்கள் மின்சாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் மின்கம்பம் தூக்கி நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் தற்காலிக ஊழியர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி பணி செய்தபோது கம்பம் முறிந்து அவர் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story