கம்பம்-ஏகலூத்து சாலையில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

கம்பம்-ஏகலூத்து சாலையில் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கம்பத்தில், மேற்குதொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் மலையில் இருந்து பெருக்கெடுத்து வரும் நீர், ஓடைகள் வழியாக கம்பம்-ஏகலூத்து சாலையில் உள்ள ஆலமரத்துக்குளம், சிக்காலி ஆகிய குளங்களுக்கு வந்து சேரும். பின்னர் குளங்கள் நிரம்பி வடிகால் மூலம் ஓடை வழியாக வீரப்பநாயக்கன் குளத்தை வந்தடையும். இந்த ஓடைகள் செல்லும் வழியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் பல லட்சம் ரூபாய் மதி்ப்பில் ஆங்காங்கே தடுப்பணை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் ஆழ்துழை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மழை காலங்களில் ஓடையில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் நேரடியாக பூமிக்கு செல்கிறது.
இதனால் நீர்மட்டம் உயர்ந்து அப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் இருந்து தண்ணீர் வரும் ஓடைகளை தனி நபர்கள் இலவமரங்களை வெட்டி அதன் துண்டுகளை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது ஓடைகள் இருந்த சுவடே இல்லாமல் போனது. இதனால் தற்போது ஓடைகள் வழியாக தண்ணீர் வராமல் விளைநிலங்களுக்குள் புகுந்து வீணாகின்றது. எனவே ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள ஓடைகளை மீட்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.