பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் சினைப்பை நீர்க்கட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் சினைப்பை நீர்க்கட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி மாணவ செவிலியர் சங்கம் சார்பில் சினைப்பை நீர்க்கட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் என்.கலைக்குருச்செல்வியின் வழிநடத்தல்படி நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி இணை பேராசியை சுமதி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மாரியம்மாள் கலந்து கொண்டு சினைப்பை பற்றியும், உணவு முறைகள் பற்றியும் விளக்கமாக பேசினார்.
பின்னர் கல்லூரி 4-ம் ஆண்டு மாணவிகள் சீதாதேவி, காயத்ரி, கோமதி, வைஷ்ணவி சுப்புலெட்சுமி ஆகியோர் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளின் அமைப்பு, அதன் பயன்பாடுகள், கருமுட்டை வளர்ச்சி, முதிர்ச்சி வெளியேற்றம், மாதவிடாய் சுழற்சி மற்றும் சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன? அது உருவாவதற்கான காரணம், அதற்கான அறிகுறிகள், கண்டறிவதற்கான முறைகள், குணப்படுத்தும் முறைகள், தடுக்கும் முறைகள், உணவு முறைகள் குறித்து கணினி மற்றும் காணொலிக் காட்சி மூலம் விளக்கினர்.
செவிலியர் சங்க ஒருங்கிணைப்பாளரும், செவிலிய மகப்பேறு துறை தலைவருமான சுமதி, மாணவிகளின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சிகளை புஷ்பலதா தொகுத்து வழங்கினார். கல்லூரி களப்பயிற்சி ஆசிரியை ஸ்ரீபிரியா நன்றி கூறினார்.