பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில்ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில், திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் மகப்பேறியல் மற்றும் மகளிர் செவிலியர் துறையின் சார்பில் பாலுறவு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி இணை பேராசிரியர் சுமதி வரவேற்றார். மருத்துவ கல்லூரி மகப்பேறியல் மகளிர் மருத்துவ துறையின் தலைவர் டாக்டர் முத்துபிரபா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, பால்வினை நோய்கள் பரவும் முறை, அதனால் ஏற்படும் பின்விளைவுகள், பாதிக்கப்பட்டவர் எவ்வாறு டாக்டரை அணுகவேண்டும் என்பது குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், 4-ம் ஆண்டு மாணவிகள் முத்துமாரி, மகாலட்சுமி, பவித்ராஜெபலட்சுமி, தேவிபிரியா, சிநேகா, அபிராமி ஆகியோர் திரவ படிக கணினி மூலம் பாலியல் நோய் என்றால் என்ன? காரணிகள், அறிகுறிகள், பரவும் முறைகள், கண்டறியும் முறைகள், மருத்துவ சிகிச்சை முறைகள், இயற்கை வழி சிகிச்சை முறைகள், பின்விளைவுகள் மற்றும் தடுக்கும் முறைகள் பற்றி தெளிவாக விளக்கினர்.
பின்னர் தாய்மார்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், முதல் பரிசு பிரதீபாவுக்கும், 2-ம் பரிசு சின்னராணிக்கும், 3-ம் பரிசு ராஜரத்தினத்திற்கும் வழங்கப்பட்டது. நிகழ்சிகளை சுஜி, முத்துஇருளாயி ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில், செவிலியர் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புஷ்பலதா நன்றி கூறினார்.