பூந்தமல்லி அருகே மற்றொரு பஸ் மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது - பயணிகள் உயிர் தப்பினர்
பூந்தமல்லி அருகே மற்றொரு பஸ் மோதியதில் மின்சார ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் கீழே இறங்கிவிட்டதால் உயிர் தப்பினர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று காலை மின்சார ஆம்னி பஸ் ஒன்று 10-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம் அருகே சென்றபோது, பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மின்சார ஆம்னி பஸ்சின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
தனியார் பஸ் மோதிய வேகத்தில் மின்சார ஆம்னி பஸ்சின் பின் பகுதி நொறுங்கியதுடன், திடீரென பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், அலறி அடித்தபடி பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். அந்த பஸ்சின் டிரைவர், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் பஸ்சில் எரிந்த தீயை அணைக்க முயன்றார்.
அதற்குள் பஸ் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வானத்தை நோக்கி பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது. அந்த வழியாக சென்ற தண்ணீர் லாரியை நிறுத்தி அதில் இருந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் பேட்டரியால் இயங்கும் ஆம்னி பஸ் என்பதால் வெடிக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரோடு ரசாயன பவுடரை கலந்து பஸ்சில் எரிந்து கொண்டிருந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். எனினும் பஸ் முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடாக மாறியது.
சம்பவ இடத்துக்கு வந்த நசரத்பேட்டை போலீசார் மற்றும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாலையில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக நின்ற ஆம்னி பஸ்சை பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த ஆம்னி பஸ் முழுவதும் பேட்டரியால் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதால், பின்னால் வந்த தனியார் பஸ் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது தெரிந்தது. தீ விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த பயணிகளின் பணம், பொருட்கள், கல்லூரி மாணவி ஒருவரின் சான்றிதழ்கள், விலை உயர்ந்த 3 செல்போன்கள் தீக்கிரையாகின. உயிர் பிழைத்தால் போதும் என பயணிகள் அவசர, அவசரமாக பஸ்சில் இருந்து இறங்கியதால் தாங்கள் கொண்டு வந்த உடைமைகளை எடுக்காமல் சென்றுவிட்டனர். இதனால் அவை தீயில் எரிந்து நாசமாகிவிட்டது.
தீ விபத்து காரணமாக சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே பக்கத்தில் எதிரெதிர் திசையில் வாகனங்கள் இயக்கப்பட்டதால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் காலை நேரம் என்பதால் வேலை மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பரிதவித்தனர்.
இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.