தமிழ்நாட்டில் இன்று 1,000 சிறப்பு மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்


தமிழ்நாட்டில் இன்று 1,000 சிறப்பு மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 March 2023 10:48 AM IST (Updated: 10 March 2023 10:52 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் சமீபகாலமாக எச்3என்2 காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 1000 மருத்துவ முகாம்கள் இன்று நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் பேசியதாவது,

இந்த முகாம் மூலம் தமிழகத்தில் எத்தனை பேர் எச்3என்2 காய்ச்சலால் பதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியவரும். அதன் பிறகு அந்த காய்ச்சலால் பதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த இன்று 1000 மருத்துவ முகாம்களை அமைத்துள்ளோம். சமூக பரவல் ஆவதற்கு முன்பே இதனை கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் 2 பேருக்கு மட்டுமே இருந்த கொரோனா தற்போது 20 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது

ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றுவது நல்லது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றினாலே இன்ப்ளூயன்ஸா தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story