வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் சாவு
ஆரல்வாய்மொழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்த முதியவர் சாவு
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியன்விளையை சேர்ந்தவர் மனுவேல்தாஸ் (வயது77), கட்டிட தொழிலாளி. தற்போது, முதுமை காரணமாக வீட்டில் இருந்து வந்தார். இவருடைய மனைவி ஞான ஆபரணம். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் ஞானஆபரணம் அந்த பகுதியில் உள்ள சூரக்குளம் வயல்வெளியில் பூ பறிக்க சென்றதாக கூறப்படுகிறது. மனுவேல்தாஸ் தனக்கு சொந்தமான வயலுக்கு சென்றார். ஞான ஆபரணம் பூ பறித்து விட்டு வீட்டுக்கு வந்தபோது, வயலுக்கு சென்ற மனுவேல்தாஸ் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த ஞான ஆபரணம் அவரை தேடி வயலுக்கு சென்றார். அப்போது, வயலில் உள்ள வாய்க்காலுக்குள் மனுவேல்தாஸ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வயல்வெளியில் நடந்து சென்றபோது கால்தவறி வாய்க்காலுக்குள் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனுவேல்தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.