ஆவடியில் ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி


ஆவடியில் ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
x

ஆவடி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரெயில் மோதி பலியானார்.

திருவள்ளூர்

வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 70). தீவிர சிவ பக்தரான இவர், ஆவடியில் உள்ள சிவன் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக ஆவடி ரெயில் நிலையம் வந்தார்.

அப்போது ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற மூதாட்டி சந்திரா, அரக்கோணத்தில் இருந்து சென்னை வேளச்சேரி நோக்கி வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருத்தணி பைபாஸ் சாலை பகுதியில் வசிப்பவர் சுப்ரமணி என்கிற குருநாதன் (வயது 71). இவர் கடந்த 2-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது விநாயகபுரம் பஸ் நிறுத்தம் எதிரே சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணி மோட்டார் சைக்கிள் மீது அதி வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சுப்பிரமணியை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துகுறித்து சுப்ரமணியின் மகன் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story