எண்ணெய் பனைகன்று நடவு விழா
எண்ணெய் பனைகன்று நடவு விழாவுக்கு விவசாயிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு தேசிய சமையல் எண்ணெய்-எண்ணெய் பனை இயக்கத்தின் கீழ் 25 எக்ேடர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கினை 75 சதவீதம் சாதனை அடையும் வகையில் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய சமையல் எண்ணெய் பனை கன்று நடவு விழா வருகிற 5-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. எண்ணெய் பனை பயிரானது நடவு செய்ததில் இருந்து 3 ஆண்டுகளில் மகசூல் தரவல்லது. எண்ணெய் பனை நடவு செய்வதற்கு களி கலந்த மணல் அல்லது செம்மண் கலந்த மணல் பகுதி மற்றும் நல்ல நீர் வசதிமிக்க பகுதி ஏற்றதாகும். ஒரு எக்ேடருக்கு 20-ல் இருந்து 25 டன் அளவு வரை எண்ணெய் பனை குலைகள் அறுவடை செய்யப்படுகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் எண்ணெய் பனை குலைகள் அரசு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் வரை அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதில் சிரமம் ஏற்படாது. தற்போது நடைபெற உள்ள இந்த விழாவில் பங்கேற்று மானியம் பெற விரும்பும் விவசாயிகள் கணினி சிட்டா, அசல் அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வயல் வரைபடம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்தும் உழவன் செயலி மூலம் பதிவு செய்தும் இந்த எண்ணெய் பனை நடவு விழாவில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனரை (நடவுபொருள்) 9715167612 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.