உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கலெக்டரிடம் அறிக்கை தாக்கல்
திருவாரூர் அருகே விருந்து சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த விவகாரத்தில ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
திருவாரூர் அருகே விருந்து சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த விவகாரத்தில ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
விருந்து
திருவாரூர் அருகே உள்ள திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள்.இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
இவருக்கு 5 மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.இதில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு 5 வகை சாதம் மற்றும் சிக்கன் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது.
வாலிபர் சாவு
விருந்து சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி-மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 19 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வேளுக்குடியை சேர்ந்த செல்வ முருகன் (24) என்பவர் நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கர்ப்பிணியான மாரியம்மாள் திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விருந்தில் பரிமாறப்பட்ட 5 வகை சாதங்கள் மாரியம்மாளின் தாயார் வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்து வரப்பட்டது.
சிக்கன் பிரியாணி திருவாரூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலிலும், புலிவலம் பகுதியில் உள்ள ஒரு கேட்டரிங் சர்வீசிலும் வாங்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
கலெக்டரிடம் அறிக்கை தாக்கல்
இதனையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்சம்பந்தப்பட்ட பிரியாணி கடை மற்றும் கேட்டரிங் சர்வீஸ் நடைபெறும் இடத்தில் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அறிக்கையை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் நேற்று சமர்பித்தனர்.