கிருஷ்ணா நீர் திறப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டுகோள் - ஆந்திர அரசுக்கு அதிகாரிகள் கடிதம்
ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளதால் கிருஷ்ணா நீர் திறப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுகோள் விடுத்து ஆந்திர அரசுக்கு பொதுபணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரில் சேமித்து வைத்து தேவைப்படும் போது சென்னை குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவு எட்டியது. மேலும் கண்டலேறு அணையில் இருந்தும் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதை அடுத்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு அனுப்பு வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை முதல் தவணையில் 8 டி.எம்.சி.யும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும். ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் செம்பரம்பாக்கம் கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் பூண்டு ஏரிக்கு கிருஷ்ணா தண்ணிர் திறப்பு நிறுத்த வேண்டும் என்று கடந்த மாதமே தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனிடையே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி இந்த மாதம் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 2-வது தவணையாக வழங்க வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீர் திறப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு சில மாதங்கள் கழித்து திறக்க வேண்டும் என்று பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளனர். கண்டலேறு அணையிலிருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை தேக்கி வைக்க ஏரிகளில் இடம் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது பூண்டி ஏரிக்கு 165 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக இணைப்பு கால்வாய் மூலம் 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி.தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 10.700 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரைக் கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க முடியும்.