22 அடியை நெருங்குவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை
22 அடியை நெருங்குவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரி. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும், கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாகவும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.50 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,986 மில்லியன் கன அடியாகவும் நீர் வரத்து 705 கன அடியாகவும் உள்ளது.
தற்போது சென்னை குடிநீருக்காக 104 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எப்போதும் மதகுகளின் பாதுகாப்பு கருதி 22 அடியை தொட்ட உடன் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடுவது வழக்கம். தற்போது சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருப்பதால் தற்போதே ஏரி நிறைந்து கடல் போல் காட்சி அளிக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் அளவையும், மழை குறித்த நிலவரத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் முதல் கட்டமாக எவ்வளவு உபரிநீர் திறந்து விடுவது என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.