ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அதிகாரி ஆய்வு
விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு இ நாம் இணைய வழி பரிவர்த்தனை பணிகளை ஆய்வு செய்த அவர், புதியதாக அமைக்கப்பட்டுள்ள இ நாம் இணைய தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தரம் பிரிப்பு எந்திரத்தின் மூலம் தரம் பிரிப்பு செய்து அவற்றை இநாம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை செயல் விளக்கத்துடன் ஆய்வு செய்தார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் இ நாம் திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த விற்பனைக் கூட அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். மேலும் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுப்பதோடு, கொள்முதல் செய்யப்பட்ட தானிய மூட்டைகளுக்கான உரிய பணத்தை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
உழவர் சந்தை
பின்னர் அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து விருத்தாசலம் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உழவர் சந்தையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வி்ன் போது, கடலூர் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் விஜயா, விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.