தினத்தந்தி செய்தி எதிரொலி:கூத்தக்குடி பள்ளி விடுதியில் அதிகாரி ஆய்வு :குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக மாணவர்களிடம் உறுதி
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கூத்தக்குடி பள்ளி விடுதியில் அதிகாரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக மாணவர்களிடம் அவர் உறுதியளித்தார்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் எறஞ்சி, காச்சக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 57 மாணவர்கள் ஆதி திராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
விடுதி கட்டிடம் பராமரிப்பு இன்மை, விஷ பாம்புகள் நடமாட்டம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால், இரவு நேரங்களில் இந்த விடுதியில் மாணவர்கள் தங்குவதில்லை. மதியம் ஒரு வேளை மட்டும் வந்து உணவு சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தினசரி அவர்களது வீடுகளுக்கு சென்று பள்ளிக்கு வருகிறார்கள்.
அதிகாரி ஆய்வு
இந்த நிலையில் மாணவர்களை அச்சுறுத்தும் விடுதி தொடர்பாக நேற்று 'தினத்தந்தி' யில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு நேற்று விடுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்த மாணவர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாணவர்கள் தரப்பில், விடுதியில் குடிநீர் உப்பு நீராக உள்ளதால் குடிக்க முடியவில்லை. அதேபோன்று போதிய மின்விளக்குகள், மின்விசிறிகள் விடுதியில் இல்லாமல் உள்ளது. கட்டிடமும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் தான் நாங்கள் அங்கு தங்க அச்சப்படுவதாக கூறினர்.
அதை தொடர்ந்து மாணவர்களிடையே அதிகாரி கூறுகையில், குடிப்பதற்கு நல்ல குடிநீர் மற்றும் மின்விளக்கு, மின்விசிறி வசதிகள் உடனடியாக செய்து தரப்படும். எனவே மாணவர்கள் அனைவரும் விடுதியில் தங்கி, நன்றாக படிக்க வேண்டும் என கூறினார்.
புதிய கட்டிடம்
பின்னர், விடுதி காப்பாளர் ஆறுமுகத்திடம் மாணவர்களின் வருகையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், அதோடு மாணவர்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் கூத்தக்குடி பகுதியில் தற்காலிகமாக மாணவர்கள் தங்குவதற்கு வாடகை கட்டிடம் கிடைத்தால் அங்கு விடுதியை நடத்திக்கொண்டு, பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு கூறினார்.