ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்


ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
x
தினத்தந்தி 22 Sept 2023 5:30 AM IST (Updated: 22 Sept 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு கரையோரத்தில் நிலம் அக்கிரமிப்பை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

தேனி

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. மேலும் மறைமுக பாசனம் மூலம் தென்னை, வாழை, திராட்சை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று கம்பத்தில், காமயகவுண்டன்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் கரையோரப்பகுதிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் சமன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் காமயகவுண்டன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் நஜீம்கான் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை எச்சரித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story