கள்ளச்சாராயம் இல்லாத நிலையை அடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்


கள்ளச்சாராயம் இல்லாத நிலையை அடைய அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 May 2023 12:15 AM IST (Updated: 25 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லாத நிலையை அடைய அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லாத நிலையை அடைய அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறினார்.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பாக போலீஸ் துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு அமல் பிரிவு, மருத்துவத் துறை மற்றும் வனத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றுப்படுகை பகுதிகளிலும், வல்லநாடு மலைப்பகுதிகளிலும் மற்றும் மாவட்டம் முழுவதும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? கோவில் திருவிழாக்களின் போது சாராய விற்பனை ஏதும் நடக்கிறதா? கள் விற்பனை ஏதும் நடக்கிறதா? என்பதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலீஸ் துறை மூலம் கள்ளச்சாராயம் குறித்த பொதுமக்களின் தகவல்களை பெறும் பொருட்டு வாட்ஸ் ஆப் எண் 8300014567, 9514144100 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அனுமதி பெறாத பார்கள், சந்துக்கடைகள் மற்றும் மது விற்பனை செய்யும் தாபாக்களை சீல் வைத்து உரிமையாளர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மதுவிலக்கு குற்றங்களுக்கு சிறைதண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தியவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காகவும், அவர்கள் மீண்டும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வேறுதொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும் மறுவாழ்வு நிதி, மானியமாக வழங்கப்படுகிறது. 2023-24-ம் ஆண்டுக்கான மறுவாழ்வுநிதி பெற தகுதியான நபர்களின் பட்டியலை மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தயாரிக்க வேண்டும்.

விற்பனை விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 142 டாஸ்மாக் கடைகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கான விற்பனை விவரத்தை சேகரித்து, குறைவான விற்பனை பகுதிகளை கண்டறிய வேண்டும்.

மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் ஹாலோகிராம் முத்திரையானது, ஒயின் பாட்டில்களில் டாஸ்மாக் கிடங்கிலும், பிற மதுபான பாட்டில்களில் அவை உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலையிலும் ஒட்டப்படும். அதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத பார்களின் பட்டியலை போலீஸ் துறைக்கு அளிக்க வேண்டும். பார்கள் அனுமதிக்கப்பட்ட பரப்பளவில் தான் செயல்படுகிறதா? அல்லது விதிமீறல் உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் மெத்தனால் பயன்பாடு ஏதும் இல்லை என்பதை ஆய்வு செய்து சான்று அளிக்க வேண்டும். மெத்தனால் தொழிற்சாலை உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதா? உரிய உரிமதாரர்களுக்கு விற்கப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் பணியில் சுணக்கம் ஏதுமின்றி தங்களுக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை பரிமாறி கூட்டு நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லாத நிலையை அடைய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story