விளைச்சல் அதிகரிக்க விதையை பரிசோதனை செய்து பயிரிட வேண்டும்அதிகாரி தகவல்
விளைச்சல் அதிகரிக்க விதையை பரிசோதனை செய்து பயிரிட வேண்டும் என்று விதைப்பரிசோதனை அலுவலர் தெரிவித்துள்ளார்.
விதை சேமிப்பு
வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் விதைகள் நல்ல தரத்துடன் இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தால் மட்டுமே விளைச்சல் அதிகரிக்கும். விதை தேவையை பூர்த்தி செய்வதற்கு அறுவடை காலத்தில் விதைகளை தகுந்த முறையில் சுத்திகரிப்பு செய்து சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
விதைகளை சேமிக்கும்போது அதன் ஈரப்பதம் மிகவும் முக்கியம். சரியான ஈரப்பத நிலையில் உள்ள விதைகள் பூச்சி மற்றும் பூஞ்சான் தாக்குதல் இன்றி நீண்ட நாட்கள் சேமித்து வைக்க முடியும். விதைகளின் ஈரப்பதத்தை சேமிப்புக்காலம் முழுவதும் பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் ஈரப்பத சதவீதம் மாறுபடும். நெல் அதிகபட்ச ஈரப்பதம் 13 சதவீதம், கம்பு, கேழ்வரகிற்கு அதிகபட்ச ஈரப்பதம் 12 சதவீதம், உளுந்து, பாசிப்பயிறு, எள் ஆகியவற்றுக்கு 10 சதவீத ஈரப்பதம் இருக்க வேண்டும். விதை சேமிப்புக்கு பயன்படுத்தப்படும் சாக்குப்பைகள் புதியதாக இருக்க வேண்டும். 2 மாதங்களுக்கு ஒருமுறை விதை மாதிரிகளை எடுத்து விதைப்பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்புத்திறன் மற்றும் ஈரப்பதம் பரிசோதனை செய்து அதன் முடிவுகளின்படி சில பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம்.
பரிசோதனை மேற்கொள்ள
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்தியாளர்கள், விதை வினியோகம் செய்வோர், விதை விற்பனையாளர்கள், விவசாயிகள், தாங்கள் சேமித்து வைத்துள்ள விதையை பரிசோதனை மேற்கொள்ள ரூ.80 கட்டணத்துடன் வேளாண் அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், வேளாண் இணை இயக்குனர் அலுவலக முதல் தளம், விழுப்புரம் என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை விதை பரிசோதனை அலுவலர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.